நம் வாழ்வில் தவிர்க்க வேண்டிய ஏழு செயல்கள் - Manithan24.com

நம் வாழ்வில் தவிர்க்க வேண்டிய ஏழு செயல்கள்

 

பல நேரங்களில், நாம் கடுமையாய் உழைத்த போதும், வெற்றி நம் வசமாகத் தயங்கும்! இதற்கு மிகப்பெரிய காரணம் எதுவும் இருக்காது! கூர்ந்து கவனிப்போமானால் நம் தோல்விக்கான காரணங்களை நம்மால் நிச்சயம் அறிய முடியும். அவைகளில் முக்கியமான, ஏழு காரணங்கள் இதோ…


1. பிறர் வெற்றியில் பொறாமை…

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் பெரிய வெற்றி அடையும் போது அவர்களின் உழைப்பை நாம் பார்ப்பதில்லை. அவருடைய வெற்றியில் பொறாமை கொள்கிறோம். இதனைத் தவிர்த்து அவர்களின் அனுபவத்தையும் உள்வாங்கிக் கொண்டால் நிச்சயம் வெற்றி நமதே.

2. வெள்ளைச் சட்டை மனப்பான்மை…

படிப்பு, அந்தஸ்து என்ற வட்டத்தைப் போட்டுக் கொண்டு, அதற்குள்ளேயே வாழ முயலுவதால், ஏமாற்றமே மிஞ்சும். தெரிந்த அல்லது பிடித்த வேலையை அல்லது தொழிலை முழு ஆர்வத்தோடு செய்தால், அது வெற்றியை தேடித்தருவது உறுதி.

3. தோல்வியில் கவலை…

‘யானைக்கும் அடி சறுக்கும்‘ என்பது பழமொழி. சறுக்கி விழுந்ததைப் பற்றி யோசித்து எந்தப் பயனும் இல்லை. நமது பயணத்தில் ஏற்பட்ட தோல்விகளை படிகளாக்கிப் பயணிப்போமானால் வெற்றியை எளிதில் அடையலாம். தோல்வியால் கவலை கொண்டால் தொடர்ந்து பயணிக்க இயலாது.

4. தகுதியற்றோருக்கு உதவி…

நாம் மற்றவருக்கு உதவ வேண்டும். அப்படி செய்யும் உதவி தகுதியான நபர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும். இதில் நாம் தவறும்போது நம்முடைய பணத்தை மட்டுமல்ல, மன நிம்மதியையும் இழக்க நேரிடும். அந்த இழப்பு நிச்சயம் நமது வெற்றியைப் பாதிக்கும்.

5. வேலைகளைத் தள்ளிப் போடுதல்…

‘அன்று முடியாத வேலை என்றும் முடியாது’ என்பது என்பது நம் முன்னோர்களின் அனுபவ மொழி. தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் வெற்றியைத் தள்ளிப் போடுவதோடு தோல்விக்கான வாய்ப்புக்களை உருவாக்குவதாய் அமையும். எனவே தள்ளிப்போடும் மனநிலையைத் தள்ளி வைப்போம். வெற்றியின் ருசியை விரைவில் அனுபவிப்போம்!

6. தன் கருத்தே பெரிதென கூறல்…

‘எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்து விடாது‘ என்ற உண்மையைப் புரிந்து கொண்டோமானால் தன் கருத்தே பெரிதென கூறும் மனநிலை மாறிவிடும். பிறர் கருத்தையும் கருத்தில் கொள்ளும் மனநிலை நமக்கு வந்துவிட்டாலே அது கூட்டு முயற்சியாக மாறி எளிதில் வெற்றியைப் பெற்றுத் தரும்.

7. உடல் நலத்தைப் பாதிக்கும் பழக்கங்கள்…

போதைப் பொருட்கள் மற்றும் உடல் நலத்தைப் பாதிக்கும் பொருட்களைத் தீண்டாமல் இருப்போமானால் உடல் திறனோடும், மனத் திடனோடும் நாம் வாழ முடியும். உடல் திறனும், மனத் திடமும் நிறைவாய் இருக்கும் போது வெற்றி 100/100 சதம் உறுதி.

சிற்றுளி கூட மலையைத் துளைத்து விடும். அதனைப் போல சின்னஞ்சிறு தேவையற்ற செயல் கூட நம் வெற்றியைத் தடுத்து விடும். எனவே, நாம் வாழும் வாழ்வில் ஏற்றம் பெற மேற்கண்ட ஏழு செயல்களையும் தள்ளி வைப்போம்! உறுதியான வெற்றி பெறுவோம்!!இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் பல பதிவுகள் கீழே…

No comments:
Write comments

பல்சுவை

பரபரப்பு